திருமாலை

“திருமாலை அறியாதார் திருமாலை அறியாதார்” என்று சிலேடையாகச் சொல்லுவதுண்டு. முதலில் சொல்லுவது திருமாலை என்னும் பிரபந்தம். இதை அறியாதவர்கள் திருமால் என்ற கடவுளையே அறியாதார் எனும் பொருள்படும் இந்த வாக்கியம்.

இந்தப் பிரபந்தம் அரங்கனின் நாம சங்கீர்த்தன மகிமையைச் சொல்லுவது. அரங்கனை மகிழ்விக்க எளிமையான வழி அவன் நாமத்தை சொல்லுவதுதான். இந்தக் கலி யுகத்தில் பகவானை அடையச் சிறந்த வழி நாம சங்கீர்த்தனம்தான்.

இதில் 45 பாடல்கள் உள்ளன. இதை இப்படிப் பிரிப்பார்கள்:

1-3 பெருமானை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

4-14: ஆழ்வார் நமக்கு உபதேசம் செய்கிறார்.

15-24: பகவான் நம்மைத் திருத்த எடுத்த முயற்சிகள் பற்றிச் சொல்கிறார்.

25-34: நிறையத் தீமைகள் உள்ள தன்னையே பெருமான் எப்படிக் காக்கிறான்.

35-37: பகவானிடமிருந்து ஆழ்வார் விலகிப் போகிறார்.

38: இதுதான் ரத்தினமான பாடல். த்வய மந்திரத்தைப் பற்றிச் சொல்லும் பாடல்.

39-44: பரம பக்தனின் பெருமைகள் சொல்லப் படுகின்றன.

45: பல ச்ருதிப் பாடல். அதாவது இந்தப் பாசுரங்களைச் சொல்லுவதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்று சொல்லும் பாடல்.

காவலிற் புலனை வைத்து, கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே* மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற* ஆவலிப் புடைமை கண்டாய், அரங்க மாநகருளானே! 1

கட் டுப்படாத புலன்களினால் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும் எமன் மற்றும் அவன் தூதர்களின் தலை மீது கால் வைத்து நடக்கிறோம். ஏன் தெரியுமா? பிரளய காலத்தில் உலகைக் காக்கும் பொருட்டு அதை உண்டு, பின் உமிழ்ந்த அரங்கனாதனின் நாமத்தை நாங்கள் சொல்லுவதினால்தான்.

பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!** 2

தனக்கு வைகுந்தமே வேண்டாம் என்று மறுத்த மூவரில் இந்த தொண்டரடிப்பொடியாழ்வாரும் ஒருவர். மற்ற இருவர் அநுமனும், திருப்பாணாழ்வாரும்.

இவருக்குச் சுவையானது எது தெரியுமா? பச்சை மலை போன்ற உடலை உடையவனும், பவளம் போன்ற இதழ்கள் உடையவனும், தமரை போன்ற கண்களை உடையவனும், அடியார்களை ஒருபோதும் கை விடாதவனும், தேவர்களின் தலைவனும், ஆயர்களின் குலக் கொழுந்தானவனும் ஆகிய அரங்கனாதனின் புகழைப் பாடுவதே இவருக்குச் சுவையானது. ஆகவே தனக்கு வைகுந்தம் போகும் ஆசை இல்லை என்கிறார்.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினையாண்டு பேதை பாலகன் அது ஆகும், பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே! 3

முதல் பாட்டில் தனக்கு சொர்க்கம் வேண்டாம் என்றார். இந்தப் பாட்டில் தனக்கு மறுபிறவி வேண்டாம் என்கிறார்.

வேதங்கள் மனிதருக்கு நூறு வயது என்று சொல்கின்றன. இதில் பாதியான 50 ஆண்டுகள் தூக்கத்திலேயே கடந்து விடுகின்றன. மீதி 50 ஆண்டுகளில் சிறு வயதிலிருந்து முதுமை வரை பசி, பிணி, மூப்பு ஆகிய துன்பங்களை அநுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே தனக்கு மறுபிறவியே வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.

மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால் கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய பித்தனைப் பெற்றும் அந்தோ! பிறவியுள் பிணங்குமாறே! 4

பெரும் பாவங்களைச் செய்து வந்த கத்திரபந்து என்பவன் கோவிந்த நாமத்தைச் சொல்லியே வைகுந்தப் பதவி அடைந்தான். இந்த எளிய வழி இருக்கும் போது ஏன் இப்பிறவியில் கிடந்து உழல வேண்டும் என்று கேட்கிறார் ஆழ்வார்.

இந்தக் கத்திரபந்துவின் கதை விஷ்ணுதர்மத்தில் 97 அத்தியாயத்தில் வருகிறது.

இவன் மிகவும் கொடியவனாக அனைவரையும் துன்புறுத்தி வந்தான். ஆகவே இவன் வீட்டார்கள் இவனைக் காட்டிற்குத் துரத்தி விட்டார்கள். அங்கேயும் அவன் சும்மா இருக்கவில்லை. வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தான்.

ஒரு நாள் ஒரு முனிவர் காட்டில் வழி தவறி பசியுடனும் தண்ணீர் தாகத்துடனும் அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த கத்திரபந்துவுக்கு அதிசயமாக இரக்கம் பிறந்தது. அவருக்கு நீரும் உணவும் அளித்து கை கால் பிடித்து விட்டான். முனிவர் நன்றியுடன் அவனைப் பற்றி விசாரித்தார்.

அவன் தான் யார், என்ன பாவங்கள் செய்து கொண்டிருக்கிறான் என்பதை உண்மையாகச் சொன்னான். அவனைத் திருத்த வேண்டும் என்று நினைத்த முனிவர், “நீ எது செய்தாலும் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்” என்றார். அவனும் அந்த மூன்றெழுத்து மந்திரமான “கோவிந்தா” வைச் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆகவே அவனுக்கு வைகுந்தம் கிடைத்தது.

இந்தக் கத்திரபந்துவை வடமொழியில் க்ஷ்த்திரபந்து என்று குறிப்பிடுகிறார்கள். ஆழ்வார் இதை எப்படி அழகாகத் தமிழ் படுத்தியிருக்கிறார் பாருங்கள்!

ஆழ்வார் மட்டுமல்ல, திருக்கோளூர் பெண்பிள்ளையும் தன் ஒன்பதாவது ரகசியத்தில் “மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்திரபந்துவைப் போலே” என்கிறாள்.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு உண்டு இராக் கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதம்உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே. 5

துழாய் மாலை அணிந்த மார்பை உடையவனான அரங்கனின் புகழ் பாடுவதை விட்டு, ஏன் பெண்கள் தரும் சுகத்தையும் வயிறு நிரம்ப உண்ணும் சுகத்தையுமே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சாடுகிறார் ஆழ்வார்.

மறம்சுவர் மதில் எடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்போது அறிய மாட்டீர் அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே புறஞ் சுவர் கோலம் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே! 6

பாவச் சுவர்களுக்குப் பின்னால் பதுங்கி இருப்பவர்களைப் பார்த்து ஆழ்வார் கேட்கிறார்: “நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது அரங்கனின் பெருமை பாடிகொண்டிருக்காமல் உங்கள் உடலை அழகு செய்வது எதற்காக?”

புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்? தலைஅறுப்பு உண்டும் சாவேன், சத்தியம், காண்மின் ஐயா! சிலையினால் இலங்கைசெற்ற தேவனே தேவன் ஆவான். 7

ஆழ்வார் காலத்தில் புத்தம், சமணம் ஆகிய மதங்களும் மக்களால் பின்பற்றப் பட்டு வந்தன. ஆழ்வார் அம்மதங்களை நீச மதங்கள் என்கிறார். நம் தர்மங்களை நன்கு கற்றறிந்தவர் வேறு மதங்களைப் பற்றிக் கேட்கவே மாட்டார்கள். தன் வலிமையான வில்லினால் இலங்கையை வென்றவனே நமக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆவான். இந்த சத்தியமான உண்மையை அறிந்தவனாகிய என் தலையை வெட்டினாலும் நான் இறக்க மாட்டேன். வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள் என்று சவால் விடுகிறார் ஆழ்வார்.

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில், போவதே நோயது ஆகி குறிப்பு எனக்கு அடையும் ஆகில், கூடுமேல், தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே! 8

அரங்கனை இகழ்ந்து சொல்லுவோரின் தலையை அறுக்க வேண்டும் என்று கொடூரமாகக் கூறுகிறார் ஆழ்வார். சமணரும் பௌத்தரும் அரங்கனை இகழ்ந்து பேசுவதைக் கேட்டாலே நோய் வந்து இறந்து விடுவோம் என்றும் கூறுகிறார்.

மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்! உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே. 9

திருமாலைத் தவிர வேறு தெய்வம் உண்டோ என்று கேட்கிறார் ஆழ்வார். இதைத் தெரியாதவர்களை மதி இல்லாத மானிடர்களே என்று அழைக்கிறார். மாடு மேய்த்தவனும், நமக்குத் தந்தை போன்றவனுமாகிய அரங்கனின் காலடியைப் பணிந்து வணங்குங்கள் என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள் தன்னாலே* காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணம்* கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்கச்* சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே. 10

பல்வேறு தெய்வங்களைப் படைத்து நமக்கு நன்மை செய்தவனும் எல்லோரும் உய்யும் வண்ணம் திருவரங்கத்தில் குடிகொண்டிருப்பவனுமான கருட வாகனப் பெருமாள் இருக்கையில் மூதேவியிடம் செல்வம் கேட்பது போல என்ன செய்கிறீர்கள் என்று நம்மைக் கேட்கிறார் ஆழ்வார்.

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்* செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்* மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா* கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. 11

இராமன் கடலில் அணை கட்டி இலங்கை சென்று ராவணனை வென்ற கதை நாம் எல்லோரும் அறிந்ததுதான். கடல் ஒன்றும் அவ்வளவு எளிதாக அணை கட்ட விட வில்லை. சாந்தமாக இராமன் கேட்டதற்கு கடல் அரசன் செவி சாய்க்கவில்லை. கோபமுற்ற ராமன் கையில் வில் எடுத்த பிறகே கடலரசன் தோன்றி வணங்கினான். அப்படிப்பட்ட ராமன் திருவங்கத்தில் குடி கொண்டுள்ளான். அவன் புகழைப் பாடாமல் ஏன் காலத்தை வீணாகக் கழிக்கிறீர்கள் என்று ஆழ்வார் கேட்கிறார்.

நமனும் முற்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க* நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி* அவனது ஊர் அரங்கம் என்னாது, அயர்த்துவீழ்ந்து அளியமாந்தர்* கவலையுள் படுகின்றார்; என்று அதனுக்கே கவல்கின்றேனே. 12

விஷ்ணு புராணத்தில் முத்கலன் என்பவன் சரித்திரம் வருகிறது. முத்கலன் பல பாவங்கள் செய்தவன். அதற்குப் பரிகாரமாக எள்ளால் ஆன பசுவைத் தானம் அளிக்கும் போது “கிருஷ்ணார்ப்பணம்” என்று கூறினான். அவன் மரணமடைந்த போது யமகிங்கரர்கள் அவனைக் கட்டி இழுத்துக்கொண்டு யமலோகம் வந்தனர். ஆனால் யமனோ அவனை வரவேற்கிறான். முத்கலன் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். யமனிடம் காரணம் கேட்க அவன் “நீ ஒரு காலத்தில் பகவான் நாமத்தைக் கூறினாய். அது இந்த யம தூதர்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆகவேதான் இந்த வரவேற்பு” என்று பகவான் நாமத்தைச் சொல்லுவதன் பெருமையைக் கூறினான். இவர்கள் பேசியதைக் கேட்ட உடனேயே மற்ற நரக வாசிகள் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பது போலவே உணர்ந்தனர்.

இவ்வளவு உயர்ந்த பெருமானின் திருநாமங்களைக் கூறாமல் உலக விஷயங்களில் கிடந்து உழல்கிறீர்களே என்று கேட்கிறார் ஆழ்வார்.

எறியும் நீர் வெறிகொள்வேலை மானிலத்து உயிர்கள் எல்லாம்* வெறிகொள் பூந் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த* அறிவுஇலா மனிசர் எல்லாம், அரங்கம் என்றுஅழைப்பராகில்* பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே. 13

கடல் சூழ்ந்த இந்த உலகத்து மனிதர்கள் எல்லாம், மணம் வீசும் மாலைகள் அணிந்தவனும், தேவர்களின் தலைவனுமான அரங்கனின் பெயரைச் சொன்னாலே போதும், புலன்களின் வசப்பட்டு வாழும் நரக வாழ்க்கை புல் முளைத்து ஒழிந்து போகும்.

வண்டின முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை கொண்டல்மீது அணவும் சோலை, குயிலினம் கூவும்சோலை* அண்டர்கோன் அமரும்சோலை, அணி திருவரங்கம் என்னா* மிண்டர் பாய்ந்து உண்ணும்சோற்றைவிலக்கி நாய்க்கு இடுமின் நீரே 14

வண்டுகள் ரீங்கரிக்கும், மயில்கள் ஆடும், மேகங்கள் கூடும், குயில் கூவும் சோலைகளுள்ள திருவரங்கத்தில் உள்ள தேவர்களின் தலைவனான அரங்கன் பெயரைச் சொல்லாத மூடர்களுக்கு சோறு கொடுக்காதீர்கள், அதை நாய்க்கு இடுங்கள்.

மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போல* பொய்யர்க்கே பொய்யன்ஆகும் புட்கொடி உடைய கோமான்* உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை* ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்;அழகன்ஊர் அரங்கம்அன்றே. 15 (886)

திருவரங்கத்திலிருக்கும் பெருமான் எப்படிப் பட்டவன் தெரியுமா? (கடவுளை நம்புபவர்களுக்கு) தன்னை நன்கு காட்டிக் கொடுப்பான். நாஸ்திகர்களுக்கு தன்னை மறைத்துக் கொண்டு விடுவான். ஆஸ்திகர்களுக்கு எழும் சந்தேகங்களை (எப்படி பெருமான் நம் துயர் களைவான்?) போக்கி அவரை ஆட்கொள்ளுவான்.

இந்தப் பாடலுக்கு உரை எழுதியவர்கள் ‘மெய்யர்’ என்ற சொல்லுக்கு ‘அத்வேசம்’ என்று பொருள் சொல்லுகிறார்கள். அத்வேசம் என்பது இதுதான்: கடவுள் நமக்கு உதவ வரும்போது மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்வது. மெய்யர் கடவுளை நம்புபவர்கள் மட்டுமல்ல; கடவுள் இல்லை என்று நாஸ்திக வாதம் செய்யாமல் இருப்பவர்களும்தான். “கடவுள் இருக்கிறாரா? அவர் நமக்கு என்ன நன்மைகள் செய்யப் போகிறார்?” என்று கேட்பவர்களும் மெய்யர்கள்தான்.

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்* மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனைப்* போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து* தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே. 16

தான் முன்னொரு காலத்தில் எப்படி இருந்தேன் என்று விவரிக்கிறார் ஆழ்வார். உலக இன்பங்களில் ஆழ்ந்திருந்தார்; பெண்களை விரும்பினார். இப்படி இருந்தவரை இந்த அரங்கனாதன் “இங்கே வா” என்று அழைத்து அவர் நெஞ்சில் புகுந்து அரங்கன் மேல் ஆசை கொள்ள வைத்தான். அப்படி உள்ள அரங்கன் உள்ள ஊர் திருவரங்கமாகும்.

விரும்பிநின்று ஏத்தமாட்டேன், விதி இலேன் மதி ஒன்று இல்லை* இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும்வண்ணம்* சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட* கரும்பினைக் கண்டுகொண்டு, என் கண்ணிணை களிக்குமாறே! 17

“பகவானைப் பற்றிச் சிந்திக்காமலும், அவனை வணங்காமலும் இரும்பு நெஞ்சம் கொண்டிருந்த என்னை மெது மெதுவாக உருக்கி அவனைத் துதிக்கும்படி செய்தான். வண்டுகள் அமரும் சோலைகளுள்ள அரங்கத்தில் கோவில் கொண்டிருக்கும் கரும்பு போன்ற அரங்கனைக் கண்டு என் கண்கள் களிப்பில் மூழ்கின” என்று ஆழ்வார் கூறுகிறார்.

இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே* தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்* கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்* பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன், பாவியேனே! 18

அரங்கனைக் கண்ட கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி பார்வையை மறைக்கிறதே என்று வருந்துகிறார் ஆழ்வார்.காவிரியில் அலைகள் கடல் போல் வீசி அடிக்கிறதாம். இப்போதுள்ள காவிரியை நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது.அந்நாளில் அணைகள் நீரைத் தடுக்க வில்லை. எப்போதும் ஜீவ நதியாக வெள்ளம் பாய்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. தாமரைக் கண்ணும் கோவை இதழுமுள்ள கண்ணன் அரங்கத்தில் அரசு செலுத்துகிறார்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டிக் வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி* கடல் நிறக்கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு* உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே! 19

போன பாடலில் கண்களில் நீர் பெருகி பெருமானைப் பார்க்க விடாமல் செய்தது. இந்தப் பாடலிலோ ஆழ்வார் உடலே உருகுகிறது. எதைக் கண்டு? கருநிறக் கடவுளான அரங்கன் படுத்திருந்த கோலத்தைக் கண்டுதான். மேற்கில் தலையையும், கிழக்கில் பாதத்தையும், வடக்கே பின்புறத்தையும், தெற்கு நோக்கி முகம் பார்த்தும் அரங்கன் அரவணையில் பாள்ளி கொண்டுள்ளான். இதைப் பார்த்துத்தான் ஆழ்வார் உடலே உருகுகிறது.

தென் திசையில் தான் இலங்கை உள்ளது. அதன் அரசன் விபீஷணன். அவன்தானே அரங்கனாதன் திருவரங்கத்தில் கோவில் கொள்ளக் காரணமாக இருந்தவன்? அதனால்தான் அவன் இருக்கும் திசையைப் பார்த்து அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறான் அரங்கன்.

பாயும்நீர் அரங்கந் தன்னுள் பாம்பு அணைப் பள்ளிகொண்ட* மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்* தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்* ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே? 20

இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள் ஒரு காட்சியை முன்வைக்கின்றனர். சம்சாரிகள் இப்படி ஆழ்வார் “இப்படி கண்கள் மறைக்கிறதே, உடல் உருகுகின்றதே,” என்றுபுலம்புவதைக் கண்டு அவரிடம் கேட்கிறார்களாம்: “இப்படிக் கஷ்டப் படுவதை விடுத்து எங்கள் போல் ஆனந்தமாக இருமேன்.” ஆழ்வார் அவ்ர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அரங்கன் பாம்பணையில் எவ்வளவு அழகாகப் பள்ளி கொண்டிருக்கிறான்! ஸ்ரீதேவி விளங்கும் திரு மார்புடனும், மரகத நிறத்தில் திருமேனியுடனும், தாமரை போன்ற கண்களுடனும், பவளம் போன்ற சிவந்த உதடுகளுடனும் பள்ளி கொண்டுள்ளான். இதைக் கண்டு எப்படி வியக்காமல் இருப்பது என்று ஆழ்வார் அந்த சம்சாரிகளைப் பார்த்துக் கேட்கிறார்.

பணிவினால் மனமது ஒன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்* துணிவினால் வாழமாட்டாத் தொல்லை நெஞ்சே! சொல்லாய்* அணியின் ஆர் செம்பொன்ஆய அருவரை அனைய கோயில்* மணிஅனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல்ஆமே? 21

ஆழ்வார் தன் நெஞ்சைக் குறை கூறுகிறார். இந்த நெஞ்சம் என்ன செய்கிறது தெரியுமா? பணிவுடன் மனம் ஒன்றி அரங்கனை வணங்கினாலே மறு பிறப்பு என்பதே கிடையாது என்பதை உணராத நெஞ்சம். செம்பொன்னாலாகிய மேரு மலை போன்ற கோவிலில் ஒளிவிடும் மணியுடன் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனை இந்த மனத்தினால் நினை என்று தன் நெஞ்சை நோக்கிச் சொல்லுகிறார் ஆழ்வார்.

பேசிற்றே பேசல் அல்லால், பெருமை ஒன்று உணரல் ஆகாது* ஆசற்றார் தங்கட்கு அல்லால், அறியல் ஆவானும் அல்லன்;* மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்* பேசத்தான் ஆவது உண்டோ? பேதை நெஞ்சே!நீசொல்லாய். 22

ஆழ்வார் தன் நெஞ்சுடன் தொடர்ந்து பேசுகிறார். வேதங்கள் சொன்னதை விட நான் என்ன பெருமானைப் பற்றிக் சொல்லிவிடப் போகிறேன்? பெருமான் தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைப்பவர்களுக்கே தன்னை உணர்த்துகிறான். மற்றவர்கள் அவனைப் பற்றி அறிய இயலாதவர்கள். ஆகவே பெருமானை வணங்கி இருப்பது தவிர வேறு என்ன செய்துவிட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ஆழ்வார்.

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்* பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்* எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே! 23

பெருமானைக் கண்குளிரக் கண்டபின் அவனை மறந்து எப்படி வாழ முடியும் என்று கேட்கிறார் ஆழ்வார். போகிற போக்கில் காவிரி ஆறு கங்கையை விடப் புனிதமானது என்கிறார். அப்படிப்பட்ட காவிரி நீர் சூழ, அழகிய சோலைகள் நிறைந்த திருவரங்கத்தில் பெருமான் பள்ளி கொண்டிருக்கிறான்.

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கந் தன்னுள்* கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டு* உள்ளமே! வலியை போலும்! ஒருவன் என்று உணர மாட்டாய்* கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே! 24

கல்லாகி விட்டாய் என்று தன் நெஞ்சைக் குற்றம் சாட்டுகிறார் ஆழ்வார். ஏன் அப்படி? வெள்ள நீர் சுழித்துக்கொண்டு ஓடும் காவிரி ஆறும், பூம்பொழில்களும் நிறைந்த திருவரங்கத்தில் உறையும் தாமரை போன்ற முகமுடைய அரங்கனைக் கண்டும் நெஞ்சம் இளகவில்லையாம். ஆகவே பெருமானை விரும்புவதும் வெறும் நடிப்பே என்கிறார் ஆழ்வார்.

குளித்து மூன்றுஅனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை* ஒளித்திட்டேன், என்கண் இல்லை நின் கணும் பத்தன்அல்லேன்* களிப்பது என் கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன்* அளித்து எனக்கு அருள் செய், கண்டாய், அரங்க மா நகருளானே! 25

இந்தப் பாடலிலிருந்து 34ம் பாடல் வரை தன்னிடம் என்னென்ன தீமைகள் இருக்கின்றன என்று பட்டியலிடுகிறார் ஆழ்வார்.

தன்னிடம் கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற எதுவுமே இல்லை. ஆகவே எதை வைத்து சந்தோஷப் படுவது? ஆழ்வாரிடம் இவை இல்லை. சிறிது இருந்தாலும் பெருமானிடம் அது கருணையைத் தூண்டி தன்பால் அருள் சுரக்கச் செய்யும் என்று ஆழ்வார் நம்புகிறார்.

போதெல்லாம் போதுகொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன்* தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்* காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே* ஏதிலேன் அரங்கர்க்கு! எல்லே! என் செய்வான் தோன்றினேனே. 26

பூ கொண்டு வந்து அரங்கன் பாதங்களில் சமர்ப்பித்துத் தொழுவதில்லை; குற்றமற்ற வார்த்தைகளால் பெருமானின் நற்குணங்களைப் பற்றிப் பேசுவதில்லை; அரங்கனிடம் அன்பு கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட நான் ஏன்தான் இப்புவியில் தோன்றினேனோ என்று வருந்துகிறார் ஆழ்வார்.

குரங்குகள் மலையை நூக்கக்குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்* தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்* மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால்* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே! 27

ஆழ்வார் நெஞ்சம் வைரம் பாய்ந்த மரம் போல் ஆகிவிட்டதாம். ஆகவே அரங்கனுக்குப் பணிவிடைகள் செய்வதில்லை.ராமபிரான் சேது அணை கட்ட குரங்குகள் மலையைப் பெயர்த்து கற்கள் கொணர்ந்தன. அணில்களோ மண்ணில் புரண்டு தன் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணல்களை அக்கற்களுக்கு அருகே உதிர்த்து அணை கட்ட உதவின. ஆனால் தான் அவைகள் பொல இல்லை என்கிறார் ஆழ்வார்.

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார், ஆனைக்கு ஆகி* செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்* நம் பரம் ஆயது உண்டே? நாய்களோம் சிறுமை ஓரா* எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே! 28

பெருமான் ஒரு ஆனையின் குரலுக்குச் செவி சாய்த்து அரக்கப் பரக்க கருடன் மேலேறி ஒடி வந்து முதலையை முடித்து ஆனையைக் காத்தான். அப்படிப்பட்ட அரங்கனுக்கு தான் தொண்டு புரியாமல் நாயை விட இழிபிறவியாக இருந்தேன் என்று ஆழ்வார் தன்னையே இகழ்ந்து கொள்ளுகிறார்.

ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை* பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி* காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்* ஆர் உளர் களைக்கண்? அம்மா! அரங்க மா நகருளானே! 29

அரங்கனுக்கு இஷ்டமான திவ்யதேசங்களில் (முக்திநாத், திருவேங்கடம், திருவரங்கம் போன்றவை) இருந்ததில்லை; அவ்வூர்களில் இருப்பவர்களோடு எந்த விதமான தொடர்பும் இல்லை. உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு யாருமில்லை. பெருமானின் திருவடியைப் பணிந்து பற்றிக்கொள்ளவுமில்லை. இப்படிப்பட்ட பாவியான தன்னைக் காப்பவர் யார் என்று அரற்றுகிறார் ஆழ்வார்.

மனத்தில் ஓர் தூய்மைஇல்லை, வாயில் ஓர்இன்சொல் இல்லை* சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா* புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா!* எனக்கு இனிக்கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே! 30

தூய மனமில்லை; வாயில் ஒரு இனிமையானசொல்லில்லை.சினத்தில் எதிரிகளை நோக்கித் தீச்சொல் வீசுகிறேன். இப்படிப்பட்ட எனக்கு வேறு கதி என்ன?

தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படத்தாரில் அல்லேன்* உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்* துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன்* அவத்தமே பிறவி தந்தாய், அரங்க மா நகருளானே! 31

தவம் புரிவோர்களிடம் சேர்ந்ததில்லை; செல்வந்தரோடும் சேர்ந்ததில்லை; உறவினர்க்கு உப்பு நீர் போல் உதவாக்கரையாக இருக்கிறேன்.சிவந்த உதடுகளுடைய பெண்களுக்கும் வேண்டாதவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட என்பிறவி வீணானதாகும்.

ஆர்த்து வண்டு அலம்பும்சோலை அணி திருஅரங்கந் தன்னுள்* கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே! உன்னைக் காணும்* மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய* மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்கனேனே. 32

அரங்கனை அடையும் வழி ஒன்றும் தோன்றாமல் மனிதருள் கள்வனாக, மூர்க்கனாக வந்து நிற்கின்றேனே என்று தன்னை நொந்து கொள்கிறார் ஆழ்வார்.

மெய் எல்லாம் போக விட்டு, விரிகுழலாரில் பட்டு* பொய்எல்லாம் பொதிந்துகொண்ட போட்கனேன் வந்து நின்றேன்* ஐயனே! அரங்கனே! உன் அருள் என்னும் ஆசை தன்னால்* பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன், பொய்யனேனே. 33

அரங்கனே! உன் அருளைப் பெறும் ஆசையில் உன் முன்னால் வந்து நிற்கின்றேன். ஆனால் நான் மனம், மொழி, மெய் என்று எல்லாவற்றிலும் பொய்யன்தான்.

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வுஒன்று இல்லாக்* கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு* உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று* வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே! 34

ஆழ்வார் விலா நோகச் சிரிக்கிறார். ஏன் தெரியுமா? தன் உள்ளத்திலேயே குடிகொண்டுள்ள திருமாலை உணர்ந்து கொள்ளாமல் தொண்டர்களுக்குத் திருட்டு வேஷம் போட்டுக்கொண்டு, நினைப்பவர்கள் உள்ளத்தில் பெருமான் உறைகின்றான் என்று அறியாமல் வெட்கத்துடன் சிரித்தேன் என்கிறார் ஆழ்வார்.

இந்தப் பாட்டுடன் ஆழ்வார் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, ஆனால் எல்லாத் தீமைகளும் உள்ளன என்று பட்டியலிட்டது நிறைவுறுகிறது. (பாடல்கள் 25- 34).

இனிமேல் இத்தனை தீமைகள் நிறைந்த தன் நிழல் கூட பெருமானின் மேல் படக்கூடாது என்று விலக நினைக்கிறார். ஆனால் பெருமானோ ஆழ்வாரை விடத் தயாரில்லை.

அடுத்த மூன்று பாடல்களில் (35- 37) ஆழ்வார் தான் விலகப் போவதைப் பற்றி விவரிக்கிறார்.

தாவி அன்று உலகம்எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய்* சேவியேன் உன்னைஅல்லால் சிக்கெனச் செங்கண்மாலே* ஆவியே! அமுதே! என்தன் ஆருயிர் அனைய எந்தாய்* பாவியேன் உன்னை அல்லால் பாவியேன், பாவியேனே. 35

ஆழ்வாரிடம் பெருமான் கேட்கிறாராம்:” மூன்று அடிகளில் எல்லாவற்றையும் அளந்த என் பாதங்களின் அடியில் யார் தலை (நல்லவர், கெட்டவர், பாவம் செய்தவர், புண்ணியம் செய்தவர்) இருக்கிறது என்று கவலைப்பட்டதே கிடையாது. ஆகவே உமக்கு அருள் செய்வோம்” என்கிறார். ஆழ்வாரோ அப்படி மூன்று அடிகளில் எல்லாவற்றையும் அளந்தவனை சேவித்த தில்லை. ஆகவே நான் மகாபாவி என்கிறார்.

மழைக்கு அன்று வரைமுன்ஏந்தும் மைந்தனே! மதுர ஆறே!* உழைக் கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு* உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே!* உன்னை யன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி! அரங்க மா நகருளானே! 36

அரங்கத்தில் உள்ள பெருமாளை ஆதிமூர்த்தி என்று அழைக்கின்றார். அன்று கோவர்த்தன கிரியை அலட்சியமாக கையில் தூக்கி தன் மக்களை(ஆடு மாடுகள் உட்பட) காத்தவனே! மானின் கண்களை நிகர்த்த பெண்களின் வலையில் அகப்பட்டுப் பாவச்செயல்கள் புரிந்தேன். எப்படிப்பட்டவன் எப்படி உன் அருகில் வருவது என்று வருந்துகிறார் ஆழ்வார்.

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்* ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்?* எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார்* அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே! 37

கலங்கிய காவிரி நீர் சூழ்ந்த அரங்கத்தில் உறையும் பெருமான்தான் நமக்கு தந்தை தாய் போன்றவர். அப்படிப்பட்டவர் என்னை இவன் நம் பயல் என்று நினைத்து என் தீய குணங்களை மன்னிக்கத் தயாராக உள்ளார். அப்படிப்பட்டவர் அருகில் நான் எப்படி அணுகுவது என்று கூறுகிறார் ஆழ்வார்.

மேம் பொருள் போக விட்டு, மெய்ம்மையை மிக உண்ர்ந்து ஆம் பரிசு அறிந்துகொண்டு, ஐம்புலன் அகத்து அடக்கிக்* காம்புஅறத் தலைசிரைத்து, உன் கடைத்தலை இருந்து* வாழும் சோம்பரை உகத்தி போலும்; சூழ் புனல் அரங்கத்தானே! 38

இது திருமாலையிலேயே விசேஷமான பாசுரம். இதை இரத்தினம் என்கிறார்கள். சென்ற 37 பாடல்கள் ஒரு பெட்டி மாதிரி. 38வது இந்தப்பாடல் ரத்தினம். பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் ஏழு பாடல்கள் பெட்டியின் மூடி போன்றது என்று சொல்கிறார்கள்.

அப்படி என்ன இந்தப் பாடலின் சிறப்பு? இது த்வய மந்திரத்தின் சாரத்தை சொல்லுகிறது. இந்த மந்திரம் ஆசாரியனிடம் சங்கு சக்கரம் ஒத்திக்கொள்ளப் படும்போது சொல்லித்தரப்படும் மந்திரங்களில் ஒன்று. இந்த மந்திரத்தை சத்தமாக சொல்லக் கூடாதாம். ஆனால் அதன் பொருள் இதுதான்: இது இரண்டு வாக்கியங்களால் ஆனது. ஒன்று சரணாகதி அனுஷ்டானம். மற்றொன்று கைங்கர்ய ப்ரார்த்தனா.

அதாவது முதலில் பகவானின் திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்டு” உன்னை விட்டால் வேறு எவரும் கிடையாது” என்று சரணடைவது. இதைத்தான் கிருஷ்ணர் கீதையிலும் சொல்லுகிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் திருவடியை சரணம் அடைந்து விடு. சரணம் அடைந்தவனை எழுப்பி பெருமான்’ உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கிறார் அதற்கு சரணடைந்தவன் சொல்லுவதுதான் த்வய மந்திரத்தில் இரண்டாம் வரி. ” தேவரீர் திருவடிகளைப் பணிந்து தொண்டு செய்ய வேண்டும் “. இதுதான் கைங்கரியப் பிரார்த்தனை. இப்பாடலில் முதல் இரண்டு வரிகள் உபேயமான தொண்டு செய்ய வேண்டுவதைச் சொல்லுகிறது அடுத்த இரண்டு வரிகள் உபாயமான சரணாகதியை சொல்லுகிறது. பாடலின் பதப் பொருளை விட அகப் பொருளை உணர்ந்து கொள்வதே சரியாகும்.

அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதி மாரில்* குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்* முடியினில் துளபம் வைத்தாய்! மொய்கழற்கு அன்பு செய்யும்* அடியரை உகத்தி போலும் அரங்க மா நகருளானே! 39

இந்தப் பாடலில் ஆரம்பித்து 44 ஆம் பாடல் வரை பெருமானின் பரம பக்தர்களின் பெருமையைப் பேசுகிறார் ஆழ்வார்.

எந்தக் குடியில் பிறந்தவராக இருந்தாலும் ஒருவர் பெருமானின் தொண்டர் என்றால் அவரை விட மேன்மையானவர்கள் வேறு எவரும் இல்லை என்ற கருத்தை இப்பாடல்களில் சொல்கிறார்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களை விட வேறு குடியில் பிறந்திருந்தாலும் உனக்குத் தொண்டு செய்யும் அடியாராக இருந்தால் அவர்களைத்தான் உனக்குப் பிடிக்கும் என்கிறார் ஆழ்வார்.

திருமறுமார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து* மருவிய மனத்தர் ஆகில் மானிலத்து உயிர்கள் எல்லாம்* வெருவு உறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்* அருவினைப் பயன துய்யார்; அரங்க மா நகருளானே! 40

உலக உயிர்களெல்லாம் பயப்படும்படியாகக் கொடுமை செய்து துன்புறுத்துபவர்களாக இருந்தாலும் அவர்கள் உன் தொண்டர்களாக இருப்பின் அவர்களே உயர்ந்தவர்கள். இவர்கள் திருமகள் அமர்ந்திருக்கும் ஸ்ரீவத்ஸம் என்ற மருவை மார்பில் உடைய உன்னை தங்கள் நினைவிலேயே எப்போதும் கொண்டிருப்பர்.

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்* தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பர் ஆகில்* ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும்* போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே. 41

தீய காரியங்களை செய்பவர்களும், செய்விப்பவர்களும் உன்னையே வானவர் தலைவன் என்றும், துளசிமாலை தரித்தவனே என்றும் அழைத்து, உன் திருவடியில் இருப்பவர்களின் சாப்பிட்ட மிச்சம் கிடைப்பது மிகவும் புனிதமானது.

பழுது இலா ஒழுகல் ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள்* இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்* தொழுமின் நீர், கொடுமின், கொள்மின், என்று நின்னோடும் ஒக்க* வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே! 42

மிகவும் சிறந்த வம்சத்தில் பிறந்து நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களே! தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெருமானின் அடியார்களாக இருந்தால் அவர்களுக்கு தாங்கள் கற்றவற்றை கொடுத்து அவர்கள் கற்றவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் பெருமானுக்குச் சமமானவர்கள் என்று நினையுங்கள்.

அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதித்* தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்* நுமர்களைப் பழிப்பர்ஆகில், நொடிப்பது ஓர்அளவில்* ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகருளானே! 43

நான்கு வேதங்கள் தெரிந்த அந்தணர்களாக இருந்தாலும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அடியார்களை பழிப்பாராயின் அந்த நொடியிலேயே அவர்கள் மிகத் தாழ்ந்த குலத்தினர் ஆவார்.

பெண்உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண் இலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப* விண்உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா!* உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே! 44

ஒரு மிருகமாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்த பெருமான் முன்னால், கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானும், பிரம்மாவும், பலகாலம் தவம் செய்த முனிவர்களும் வெட்கி நிற்பர்.

இந்தப் பாடலில் ஆழ்வார், “பெருமான் தன் பக்தன் ஒரு மிருகமாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த மிருகமே பெருமானுக்கு அணுக்கமானது” என்று கூறுகிறார்.

வள எழும் தவள மாட மதுரைமா நகரம் தன்னுள் கவள மால் யானைகொன்ற கண்ணனை அரங்கமாலை* துவளத் தொண்டுஆய தொல்சீர்த் தொண்டரடிப்பொடிசொல்* இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே! 45

இது பலச்ருதிப் பாடல்.

துளசி மாலை கட்டி பெருமானுக்குத் தொண்டு செய்யும் ஆழ்வார் பாடிய பாடல்கள் எப்படி இருந்தாலும் மதுரை மாநகரில் முன்பு கம்சன் ஏவிய குவலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனான அரங்கனுக்கு அப்பாடல்கள் இனிமையாகவே இருக்கும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்தணராகப் பிறந்த விப்ர நாராயணர் என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் எப்படிப்பட்ட சீர்திருத்தக் கருத்துகளைப் பாடி இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது.

அந்தணராக இருந்தாலும் வேதம் ஓதியவர்களாக இருந்தாலும் பெருமானின் அடியார்களை மதிக்கவில்லை என்றால் அவர்கள் ஒன்றுமே இல்லை என்கிறார் ஆழ்வார். எக்குலத்தில் பிறந்திருந்தாலும் எப்படிப்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் பெருமானின் பாதங்களை வணங்கி அடியார்களாகத் தொண்டு செய்வார்களானால் அவர்களை வணங்கி வழிபட வேண்டும் என்கிறார்.

இதே கருத்துகளை ஆயிரம் ஆண்டுகள் பின்னால் வந்த ராமானுஜரும் வழிமொழிந்தார்.

Leave a comment